Saturday, December 31, 2011

தானே புயல் காட்டுமன்னார்கோவிலை தாக்கியது

0


காட்டுமன்னார்கோவில் பகுதிகளில் அறுவடைக்குத் தயாராக இருந்த 80 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் மழையில் சாய்ந்து பாதிப்படைந்துள்ளன.

 தானே புயல் காரணமாக சிதம்பரத்தில் வியாழக்கிழமை நள்ளிரவு முதல் பலத்தக் காற்றுடன் தொடர்ந்து மழை பெய்தது. இதில் டிஜிட்டல் பேனர்கள் சாய்ந்தன. சிதம்பரத்தை அடுத்த கிள்ளை, பரங்கிப்பேட்டை மற்றும் காட்டுமன்னார்கோவில் பகுதிகளில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன.

 சிதம்பரம் பகுதியில் 400-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளதையடுத்து இவற்றைச் சீரமைப்பதற்காக திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மின்வாரியப் பணியாளர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். சிதம்பரத்தில் இருந்து சீர்காழி செல்லும் சாலையில் கடவாச்சேரி பகுதியில் நள்ளிரவு மரம் சாய்ந்து விழுந்ததில் போக்குவரத்துத் துண்டிக்கப்பட்டது. இதை காவல்துறை உள்ளிட்ட துறை அதிகாரிகள் அப்புறப்படுத்தியதைத் தொடர்ந்து பிற்பகல் 12 மணிக்கு மேல் போக்குவரத்து சீரானது. இதேபோல் புதுச்சத்திரம் அருகே சாலையில் விழுந்த மரமும் பின்னர் அப்புறப்படுத்தப்பட்டது.

 20 ஆயிரம் குடிசைகள் சேதம்: சிதம்பரம் மற்றும் காட்டுமன்னார்கோவில் பகுதிகளில் புயலால் 20 ஆயிரம் குடிசைகள் முற்றிலும் சேதம் அடைந்துள்ளன. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் சிதம்பரம் பகுதியில் குடிநீர் மற்றும் பால் விநியோகம் பாதிக்கப்பட்டது.

 சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை கொடியேற்று விழா நடைபெற்றது. இதில் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். புயல் காரணமாக சிதம்பரத்தில் வியாழக்கிழமை ஹோட்டல்கள் திறக்கப்படவில்லை. இதனால் வெளியூர்களில் இருந்து வந்த பக்தர்கள் உணவு கிடைக்காமல் சிரமப்பட்டனர்.

 பல்கலைக்கழகத் தேர்வு ஒத்திவைப்பு: அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி மையத்தின் தேர்வு அண்ணாமலை நகர் 2 மையங்கள், புதுச்சேரி ஒரு மையம், சென்னை 5 மையங்களில் நடைபெற இருந்தது. இத்தேர்வு புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இத்தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என பல்கலைக்கழகத் துணைவேந்தர் எம். ராமநாதன் தெரிவித்துள்ளார்.

 மாற்றுப் பாதையில் ரயில்கள்: சிதம்பரம் வழியாகச் செல்லும் மதுரை எக்ஸ்பிரஸ், திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ், மன்னை எக்ஸ்பிரஸ் ஆகியவை விருத்தாசலம் வழியாக மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. திருச்சி-சென்னை விரைவு பாசஞ்சர் ரயில், விழுப்புரம்-மயிலாடுதுறை பாசஞ்சர் ரயில் ஆகியவை ரத்து செய்யப்பட்டன. சிதம்பரத்தில் இருந்து மயிலாடுதுறை வழியாகச் செல்லும் ரயில் பாதையில் ஆங்காங்கே மரங்கள் விழுந்துள்ளதால் ரயில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதையடுத்து மயிலாடுதுறையில் இருந்து என்ஜினுடன் இணைக்கப்பட்ட ரயில் பெட்டியில் ரயில்வே ஊழியர்கள் சென்று ரயில் பாதையில் ஆங்காங்கே விழுந்துக் கிடக்கும் மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். பரங்கிப்பேட்டையில் உள்ள ரயில்வே கேட் புயல் காற்றில் முறிந்து விழுந்தது.

 ÷நெற்பயிர்கள் சேதம்: சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதிகளில் சுமார் 80 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட சம்பா பயிர்கள் அறுவடைக்குத் தயார் நிலையில் இருந்தன. இவை புயல் காற்றில் அடியோடு சாய்ந்துள்ளன. வடவாறு பாசனப் பகுதியில் 10 ஆயிரம் ஏக்கர், வீராணம் ஏரி மற்றும் ராஜன் வாய்க்கால் பாசனம் பெறும் 10 ஏக்கர் மற்றும் சிதம்பரம்-காட்டுமன்னார்கோவில் வட்டங்களில் 60 ஆயிரம் ஏக்கர் உள்பட 80 ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த பயிர்கள் பதராகி விடும் என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

 இது குறித்துக் கொள்ளிடம் கீழணை பாசன விவசாய சங்கத் தலைவர் பி. விநாயகமூர்த்தி கூறுகையில், மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை எவ்வித நிபந்தனையும் இல்லாமல் அரசு கொள்முதல் செய்ய வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடாக ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

 7 பேர் பலி: சிதம்பரம் பகுதியில் மழை மற்றும் குளிர் காரணமாக, பரங்கிப்பேட்டை அகரம் கலியபெருமாள்(55), கீரப்பாளையம் குப்புசாமி(55), தச்சங்காடு ராமன்(80), அரியகோஷ்டி கலியபெருமாள்(60), நஞ்சை மகத்துவாழ்க்கை சரஸ்வதி(65), சேந்திரக்கிள்ளை தில்லையம்மாள்( 70), செங்கல்மேடு பட்டுக்கண்ணு(75) ஆகியோர் உயிரிழந்துள்ளனர் என்று வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்

காட்டுமன்னார்கோவில் மருத்துவமனையில் பரபரப்பு

1

காட்டுமன்னார்கோவில்; சர்க்கரை நோய் மாத்திரை வாங்குவதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.
 இங்கு  சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்த நோயாளிகளுக்கு மருந்து மாத்திரைகள் குறிப்பிட்ட தினங்களில் தொடர்ந்து வழங்கப்பட்டு வந்தது. கடந்த காலங்களில் வாரத்திற்கு செவ்வாய், புதன், சனி ஆகிய கிழமைகளில் வழங்கப்பட்டது. இதனால் நூற்றுக்கணக்கான நோயாளிகள் தட்டுப்பாடு இன்றி மாத்திரைகளை வாங்கிச் சென்றனர். தற்போது பற்றாக்குறை ஏற்பட்டதால் செவ்வாய், வெள்ளி ஆகிய இரு தினங்கள் மட்டுமே மாத்திரைகள் தரப்படும் என்று  அறிவிக்கப்பட்டது.  இதனால் நோயாளிகள் மாத்திரைகள் வழங்கும் தினங்களில் அதிக அளவு கூடுகின்றனர். வரிசையில் நின்று வாங்கும் போது மாத்திரைகள் தீர்ந்து விடுமோ என்ற அச்சத்தில் ஒருவரை ஒருவர் தள்ளி முட்டி மோதி போட்டி போட்டுக் கொண்டு மாத்திரை வாங்க முற்படுகின்றனர்.

இதனால் ஒவ்வொரு வாரமும் மாத்திரைகள் வழங்கும் தினங்களில் மாத்திரை வழங்கும் இடத்தில் பரபரப்பும், பதற்றமும் நிலவும் ஏற்படுகிறது.
 தள்ளு முள்ளு சம்பவங்களால் வயதானவர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி சிரமப்பட்டு வருகின்றனர். எனவே  மாவட்ட நிர்வாகம் மாத்திரைகளை தட்டுப்பாடு இன்றி வழங்க வேண்டும் என்று நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

எம்.ஜி.ஆர் நினைவு நாள்

0

தமிழக முன்னால் முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவு நாளையொட்டி காட்டுமன்னர்கோயில் சட்டமன்ற அலுவலகம் அருகில் வைக்கப்பட்டுள்ள அவரது படத்திற்கு சட்டமன்ற உறுப்பினர் திரு.என்.முருகுமாறன் B.Sc.,(Agri.) B.L., மலர்தூவி மரியாதை செலுத்திய போது எடுத்தபடம். அருகில் ஒன்றிய பெருந்தலைவர் எம்.கே. மணிகண்டம், பேரூராட்சி மன்ற தலைவர் எம்.ஜி. ஆர். தாசன், மற்றும் கழக பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் பெரும்திரளாக கலந்துகொண்டனர்.

Sunday, December 18, 2011

திரு.என். முருகுமாறன் MLA நலத்திட்ட பணிகள்

1

ம. மேலவன்னியூர் அரசு (ஆ.தி.ந)மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கான இலவச மிதிவண்டியை காட்டுமன்னர்கோயில் சட்டமன்ற உறுப்பினர் திரு.என். முருகுமாறன் B.Sc.,(Agri.) B.L., அவர்கள் வழங்கினர். அருகில் ஒன்றிய பெருந்தலைவர் திரு. கே.எ. பாண்டியன் உள்ளார்.

Thursday, December 15, 2011

எய்யலூர் கோயில் சிறப்பு...

1

சீதையைப் பிரிந்த ராமபிரான் அவள் கிடைப்பாளா என நம்பிக்கை இழந்திருந்த வேளையில், சொர்ணபுரீஸ்வரரை வழிபட்டு மீண்டும் நம்பிக்கை பெற்றார். பிரிந்த தம்பதியரை சேர்த்து வைக்கும் இந்த சிவன் கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் அருகிலுள்ள எய்ய<லூரில் அருள்பாலிக்கிறார்.
தல வரலாறு: ராமர், லட்சுமணர், சீதை மூவரும் காட்டில் பர்ணசாலை அமைத்து தங்கியிருந்தனர். ராவணன் சீதையை வஞ்சகமாகக் கடத்திச் சென்றான். மனைவியைப் பிரிந்த ராமன், அவளைத் தேடி அலைந்தார். தெற்குநோக்கி வரும்போது, ஓரிடத்தில் இறக்கை வெட்டப்பட்ட நிலையில் ஜடாயுவைக் கண்டார். புஷ்பக விமானத்தில் ராவணன் சீதையைக் கடத்திய செய்தியை கேள்விப்பட்டார். ஜடாயு சிறகினை இழந்த இடம் என்பதால் அவ்விடத்திற்கு "சிறகிழந்தநல்லூர்' என்ற பெயர் உண்டானது.
ராமனின் கண்ணில் பட்ட நாரை ஒன்றும், சீதை விமானத்தில் தெற்கு நோக்கிச் சென்ற செய்தியை ராமனுக்கு தெரியப்படுத்தியது. ராமனும் அந்த நாரைக்கு மோட்சம் கொடுத்து அருள்புரிந்தார். அவ்விடம் திருநாரையூர் ஆனது. சற்றுநடந்ததும், ஓரிடத்தில் புஷ்பகவிமானத்தில் சென்ற ஒரு பெண், தான் அணிந்திருந்த பூவினைத் தரையில் போட்டுச் சென்றதாகக் கூறி ராமபிரானிடம் சிலர் கொடுத்தனர். அவ்விடம் பூவிழந்த நல்லூர் ஆனது. பின்பு கடம்ப மரம் நிறைந்த காட்டுப்பகுதியான கடம்பூர், வேலமரங்கள் அடர்ந்த வேலம்பூண்டி வந்தனர்.
அங்கிருந்து, ஈச்சமரக்காடான ஈச்சம்பூண்டியைக் கடந்து சிறுகாட்டூர் அடைந்தனர். அங்குள்ள மக்கள், கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதாகவும், வெள்ளஅபாயம் நீங்கும் வரை அவ்வூரில் தங்கும்படியும் ராமலட்சுமணரை வேண்டினர். அவர்கள் ஆற்றங்கரையில் இருந்த சிவலிங்க பாணத்தின் மேலாக, வெள்ளநீர் செல்வதைக் கண்டு ஆச்சரியப்பட்டனர். நேரம் செல்லச்செல்ல வெள்ளஅபாயம் அதிகரித்தது. ஊருக்குள் தண்ணீர் வந்துவிடும் நிலைமை உண்டானது.
வெள்ளத்தில் இருந்து மக்களைக் காப்பாற்றவும், தண்ணீர் வற்றினால் தான் தங்கள் பயணம் தடையின்றி தொடரும் என்பதாலும் ராமபிரான்தன் வில்லை எடுத்து அம்பைத் தொடுத்தார். அதுகண்டு பயந்து போன கொள்ளிடம் ஆற்றின் வெள்ளம் கட்டுபட்டது, சிவலிங்கத்தின் அடிப்பகுதி வரை வெள்ளம் குறைந்தது.
பின், அங்கு கிடைத்த மலர்களைத் தூவிசிவலிங்கத்திற்கு ராமலட்சுமணர் பூஜை செய்தனர்.
சீதாதேவியை மீட்டு வெற்றியுடன் திரும்ப வேண்டும் என்று, சிவபெருமானிடம் வேண்டிக் கொண்டு நம்பிக்கையுடன் பயணத்தைத் தொடர்ந்தனர்.
இழந்த நம்பியதை ராமர் மீண்டும் எய்தியதால் இத்தலம் "எய்யலூர்' என்றானது. தற்போது இப்பெருமான் "சொர்ணபுரீஸ்வரர்' என்ற திருநாமத்தோடு விளங்குகிறார்.
சிறப்பம்சம்: இவ்வுலக வாழ்வை சம்சார சாகரம் என்று சொல்வதுண்டு. இறைவன் ஒருவனே நமக்கு தோணியாக இருந்து கரை சேர்ப்பவர் என்ற உண்மையை எய்யலூர் சொர்ணபுரீஸ்வரர் உணர்த்துகிறார். பிரிந்த தம்பதியர் மீண்டும் சேர இவரை வழிபடுவது சிறப்பு. வேதனையில் தவித்த ராமன் இப்பெருமானை வழிபட்ட பின் ஆறுதலும், தெளிவும் பெற்றதாக ஐதீகம்.
திரேதாயுகத்தில் ராமன் வழிபட்ட மூர்த்தியானதால் புராதன மூர்த்தியாக சொர்ணபுரீஸ்வரர் திகழ்கிறார். திருமணம், குழந்தைப்பேறு, வியாபாரவிருத்திக்காக பக்தர்கள் இவரிடம் பிரார்த்தனை செய்கின்றனர். இந்தக் கோயிலின் கும்பாபிஷேகம் ஜுன்19ல் நடக்கிறது.
இருப்பிடம்: சிதம்பரத்தில் இருந்து 24 கி.மீ., தூரத்திலுள்ள காட்டுமன்னார்கோயில் சென்று, அங்கிருந்து மேலக்கடம்பூர் வழியாக 12 கி.மீ.,கடந்தால் எய்யலூரை அடையலாம்.