Thursday, December 15, 2011

எய்யலூர் கோயில் சிறப்பு...

1

சீதையைப் பிரிந்த ராமபிரான் அவள் கிடைப்பாளா என நம்பிக்கை இழந்திருந்த வேளையில், சொர்ணபுரீஸ்வரரை வழிபட்டு மீண்டும் நம்பிக்கை பெற்றார். பிரிந்த தம்பதியரை சேர்த்து வைக்கும் இந்த சிவன் கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் அருகிலுள்ள எய்ய<லூரில் அருள்பாலிக்கிறார்.
தல வரலாறு: ராமர், லட்சுமணர், சீதை மூவரும் காட்டில் பர்ணசாலை அமைத்து தங்கியிருந்தனர். ராவணன் சீதையை வஞ்சகமாகக் கடத்திச் சென்றான். மனைவியைப் பிரிந்த ராமன், அவளைத் தேடி அலைந்தார். தெற்குநோக்கி வரும்போது, ஓரிடத்தில் இறக்கை வெட்டப்பட்ட நிலையில் ஜடாயுவைக் கண்டார். புஷ்பக விமானத்தில் ராவணன் சீதையைக் கடத்திய செய்தியை கேள்விப்பட்டார். ஜடாயு சிறகினை இழந்த இடம் என்பதால் அவ்விடத்திற்கு "சிறகிழந்தநல்லூர்' என்ற பெயர் உண்டானது.
ராமனின் கண்ணில் பட்ட நாரை ஒன்றும், சீதை விமானத்தில் தெற்கு நோக்கிச் சென்ற செய்தியை ராமனுக்கு தெரியப்படுத்தியது. ராமனும் அந்த நாரைக்கு மோட்சம் கொடுத்து அருள்புரிந்தார். அவ்விடம் திருநாரையூர் ஆனது. சற்றுநடந்ததும், ஓரிடத்தில் புஷ்பகவிமானத்தில் சென்ற ஒரு பெண், தான் அணிந்திருந்த பூவினைத் தரையில் போட்டுச் சென்றதாகக் கூறி ராமபிரானிடம் சிலர் கொடுத்தனர். அவ்விடம் பூவிழந்த நல்லூர் ஆனது. பின்பு கடம்ப மரம் நிறைந்த காட்டுப்பகுதியான கடம்பூர், வேலமரங்கள் அடர்ந்த வேலம்பூண்டி வந்தனர்.
அங்கிருந்து, ஈச்சமரக்காடான ஈச்சம்பூண்டியைக் கடந்து சிறுகாட்டூர் அடைந்தனர். அங்குள்ள மக்கள், கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதாகவும், வெள்ளஅபாயம் நீங்கும் வரை அவ்வூரில் தங்கும்படியும் ராமலட்சுமணரை வேண்டினர். அவர்கள் ஆற்றங்கரையில் இருந்த சிவலிங்க பாணத்தின் மேலாக, வெள்ளநீர் செல்வதைக் கண்டு ஆச்சரியப்பட்டனர். நேரம் செல்லச்செல்ல வெள்ளஅபாயம் அதிகரித்தது. ஊருக்குள் தண்ணீர் வந்துவிடும் நிலைமை உண்டானது.
வெள்ளத்தில் இருந்து மக்களைக் காப்பாற்றவும், தண்ணீர் வற்றினால் தான் தங்கள் பயணம் தடையின்றி தொடரும் என்பதாலும் ராமபிரான்தன் வில்லை எடுத்து அம்பைத் தொடுத்தார். அதுகண்டு பயந்து போன கொள்ளிடம் ஆற்றின் வெள்ளம் கட்டுபட்டது, சிவலிங்கத்தின் அடிப்பகுதி வரை வெள்ளம் குறைந்தது.
பின், அங்கு கிடைத்த மலர்களைத் தூவிசிவலிங்கத்திற்கு ராமலட்சுமணர் பூஜை செய்தனர்.
சீதாதேவியை மீட்டு வெற்றியுடன் திரும்ப வேண்டும் என்று, சிவபெருமானிடம் வேண்டிக் கொண்டு நம்பிக்கையுடன் பயணத்தைத் தொடர்ந்தனர்.
இழந்த நம்பியதை ராமர் மீண்டும் எய்தியதால் இத்தலம் "எய்யலூர்' என்றானது. தற்போது இப்பெருமான் "சொர்ணபுரீஸ்வரர்' என்ற திருநாமத்தோடு விளங்குகிறார்.
சிறப்பம்சம்: இவ்வுலக வாழ்வை சம்சார சாகரம் என்று சொல்வதுண்டு. இறைவன் ஒருவனே நமக்கு தோணியாக இருந்து கரை சேர்ப்பவர் என்ற உண்மையை எய்யலூர் சொர்ணபுரீஸ்வரர் உணர்த்துகிறார். பிரிந்த தம்பதியர் மீண்டும் சேர இவரை வழிபடுவது சிறப்பு. வேதனையில் தவித்த ராமன் இப்பெருமானை வழிபட்ட பின் ஆறுதலும், தெளிவும் பெற்றதாக ஐதீகம்.
திரேதாயுகத்தில் ராமன் வழிபட்ட மூர்த்தியானதால் புராதன மூர்த்தியாக சொர்ணபுரீஸ்வரர் திகழ்கிறார். திருமணம், குழந்தைப்பேறு, வியாபாரவிருத்திக்காக பக்தர்கள் இவரிடம் பிரார்த்தனை செய்கின்றனர். இந்தக் கோயிலின் கும்பாபிஷேகம் ஜுன்19ல் நடக்கிறது.
இருப்பிடம்: சிதம்பரத்தில் இருந்து 24 கி.மீ., தூரத்திலுள்ள காட்டுமன்னார்கோயில் சென்று, அங்கிருந்து மேலக்கடம்பூர் வழியாக 12 கி.மீ.,கடந்தால் எய்யலூரை அடையலாம்.

1 comments:

Post a Comment