Saturday, December 31, 2011

தானே புயல் காட்டுமன்னார்கோவிலை தாக்கியது

0


காட்டுமன்னார்கோவில் பகுதிகளில் அறுவடைக்குத் தயாராக இருந்த 80 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் மழையில் சாய்ந்து பாதிப்படைந்துள்ளன.

 தானே புயல் காரணமாக சிதம்பரத்தில் வியாழக்கிழமை நள்ளிரவு முதல் பலத்தக் காற்றுடன் தொடர்ந்து மழை பெய்தது. இதில் டிஜிட்டல் பேனர்கள் சாய்ந்தன. சிதம்பரத்தை அடுத்த கிள்ளை, பரங்கிப்பேட்டை மற்றும் காட்டுமன்னார்கோவில் பகுதிகளில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன.

 சிதம்பரம் பகுதியில் 400-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளதையடுத்து இவற்றைச் சீரமைப்பதற்காக திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மின்வாரியப் பணியாளர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். சிதம்பரத்தில் இருந்து சீர்காழி செல்லும் சாலையில் கடவாச்சேரி பகுதியில் நள்ளிரவு மரம் சாய்ந்து விழுந்ததில் போக்குவரத்துத் துண்டிக்கப்பட்டது. இதை காவல்துறை உள்ளிட்ட துறை அதிகாரிகள் அப்புறப்படுத்தியதைத் தொடர்ந்து பிற்பகல் 12 மணிக்கு மேல் போக்குவரத்து சீரானது. இதேபோல் புதுச்சத்திரம் அருகே சாலையில் விழுந்த மரமும் பின்னர் அப்புறப்படுத்தப்பட்டது.

 20 ஆயிரம் குடிசைகள் சேதம்: சிதம்பரம் மற்றும் காட்டுமன்னார்கோவில் பகுதிகளில் புயலால் 20 ஆயிரம் குடிசைகள் முற்றிலும் சேதம் அடைந்துள்ளன. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் சிதம்பரம் பகுதியில் குடிநீர் மற்றும் பால் விநியோகம் பாதிக்கப்பட்டது.

 சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை கொடியேற்று விழா நடைபெற்றது. இதில் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். புயல் காரணமாக சிதம்பரத்தில் வியாழக்கிழமை ஹோட்டல்கள் திறக்கப்படவில்லை. இதனால் வெளியூர்களில் இருந்து வந்த பக்தர்கள் உணவு கிடைக்காமல் சிரமப்பட்டனர்.

 பல்கலைக்கழகத் தேர்வு ஒத்திவைப்பு: அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி மையத்தின் தேர்வு அண்ணாமலை நகர் 2 மையங்கள், புதுச்சேரி ஒரு மையம், சென்னை 5 மையங்களில் நடைபெற இருந்தது. இத்தேர்வு புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இத்தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என பல்கலைக்கழகத் துணைவேந்தர் எம். ராமநாதன் தெரிவித்துள்ளார்.

 மாற்றுப் பாதையில் ரயில்கள்: சிதம்பரம் வழியாகச் செல்லும் மதுரை எக்ஸ்பிரஸ், திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ், மன்னை எக்ஸ்பிரஸ் ஆகியவை விருத்தாசலம் வழியாக மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. திருச்சி-சென்னை விரைவு பாசஞ்சர் ரயில், விழுப்புரம்-மயிலாடுதுறை பாசஞ்சர் ரயில் ஆகியவை ரத்து செய்யப்பட்டன. சிதம்பரத்தில் இருந்து மயிலாடுதுறை வழியாகச் செல்லும் ரயில் பாதையில் ஆங்காங்கே மரங்கள் விழுந்துள்ளதால் ரயில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதையடுத்து மயிலாடுதுறையில் இருந்து என்ஜினுடன் இணைக்கப்பட்ட ரயில் பெட்டியில் ரயில்வே ஊழியர்கள் சென்று ரயில் பாதையில் ஆங்காங்கே விழுந்துக் கிடக்கும் மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். பரங்கிப்பேட்டையில் உள்ள ரயில்வே கேட் புயல் காற்றில் முறிந்து விழுந்தது.

 ÷நெற்பயிர்கள் சேதம்: சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதிகளில் சுமார் 80 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட சம்பா பயிர்கள் அறுவடைக்குத் தயார் நிலையில் இருந்தன. இவை புயல் காற்றில் அடியோடு சாய்ந்துள்ளன. வடவாறு பாசனப் பகுதியில் 10 ஆயிரம் ஏக்கர், வீராணம் ஏரி மற்றும் ராஜன் வாய்க்கால் பாசனம் பெறும் 10 ஏக்கர் மற்றும் சிதம்பரம்-காட்டுமன்னார்கோவில் வட்டங்களில் 60 ஆயிரம் ஏக்கர் உள்பட 80 ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த பயிர்கள் பதராகி விடும் என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

 இது குறித்துக் கொள்ளிடம் கீழணை பாசன விவசாய சங்கத் தலைவர் பி. விநாயகமூர்த்தி கூறுகையில், மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை எவ்வித நிபந்தனையும் இல்லாமல் அரசு கொள்முதல் செய்ய வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடாக ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

 7 பேர் பலி: சிதம்பரம் பகுதியில் மழை மற்றும் குளிர் காரணமாக, பரங்கிப்பேட்டை அகரம் கலியபெருமாள்(55), கீரப்பாளையம் குப்புசாமி(55), தச்சங்காடு ராமன்(80), அரியகோஷ்டி கலியபெருமாள்(60), நஞ்சை மகத்துவாழ்க்கை சரஸ்வதி(65), சேந்திரக்கிள்ளை தில்லையம்மாள்( 70), செங்கல்மேடு பட்டுக்கண்ணு(75) ஆகியோர் உயிரிழந்துள்ளனர் என்று வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்

0 comments:

Post a Comment