Friday, February 25, 2011

பாமகவுக்கு 'குட்டு' வைத்த அமைச்சர் பன்னீர் செல்வம்

0

சேலம்: பாமகவினர் ஒரு இடத்திலும் அதிக நாட்கள் இருப்பதில்லை. கூட்டணியில் இருந்தால் ஒரு பேச்சு, இல்லாவிட்டால் ஒரு பேச்சு என்று இருக்கிறார்கள். இப்படியெல்லாம் இருக்கக் கூடாது என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் பேசியுள்ளார். அப்போது மேடையில் இருந்த பாமக எம்.எல்.ஏக்கள் இதைக் கேட்டு தர்மசங்கடத்தில் நெளிந்தனர்.

சேலம், தாரமங்கலத்தில் அரசு ஆரம்ப சுகாதார மைய திறப்பு விழா நடைபெற்றது. இதில் பாமக எம்.எல்.ஏக்கள் காவேரி, கண்ணையன், தமிழரசு(வீரபாண்டி ஆறுமுகத்திற்கு எதிராக கடுமையாக செயல்பட்டவர்கள் இவர்கள்) ஆகியோரும் கலந்து கொண்டனர்.

அப்போது பன்னீர் செல்வம் பேசியதாவது:

மாநில அளவில் நிறைவேற்றப்பட்டுள்ள பல்வேறு திட்டங்களை அனைத்துத் தரப்பினரும் பாராட்டுகிறார்கள். இப்போது பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்களும் பாராட்டுகின்றனர். ஆனால் இவர்கள் 10 நாள்களுக்கு முன்பு எப்படிப் பேசினார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். இப்போது கூட்டணி என்று வந்தவுடன் இப்படி மாற்றிப் பேசுகிறார்கள்.

கூட்டணியில் இருக்கும்போது ஒரு மாதிரியாகவும், வெளியேறியவுடன் வேறு மாதிரியாகவும் பேசக்கூடாது. கடந்த சட்டப் பேரவைத் தேர்தலின்போது திமுக கூட்டணியில் பாமக இருந்தது. இடையில் கொஞ்சம் வருத்தப்பட்டு பிரிந்து சென்றார்கள். அவர்கள் ஒரே இடத்தில் அதிக நாள்கள் இருக்க மாட்டார்கள். கடந்த 2001-ல் அதிமுக-வுடன் இருந்த பாமக தேர்தல் முடிந்ததும் பிரிந்து விட்டது.

பின்னர் 2006-ல் எங்களுடன் கூட்டணி அமைத்து இரண்டரை ஆண்டுகள் இருந்தது. எனினும் தமிழக முதல்வர் அவர்களை வெளியேற்றாத நிலையில் அவர்களாகவே பிரிந்து சென்றனர். இப்போது மீண்டும் எங்கள் கூட்டணியில் இணைந்துள்ளனர் என்றார் அவர்.

பன்னீர் செல்வம் இப்படி போட்டுத் தாக்கியதைப் பார்த்த பாமக எம்.எல்.ஏக்கள் நெளிந்தபடி அமர்ந்திருந்தனர்

நன்றி : ஒன் இந்தியா  

0 comments:

Post a Comment